loder

ஆடல் கலை / பரதம்

  • Home
  • ஆடல் கலை / பரதம்

ஆடல் கலை.

ஆதிகால மனிதன் பேசத்தெரியும் முன்பே முகக்குறி, சைகை கைக்குறிகளாலும், உறுப்பசைவுகளாலும் தன் உணர்ச்சியையும் கருத்தையும் வெளிப்படுத்தினான், ஆதலால், மொழிக்கும் இசைக்கும் முன்பிருந்தே நடனம் இருந்ததுடன் மொழியும் இசையும் சேர்ந்து நடனக் கலைக்கு ஒரு வடிவம் தந்தன.

அறுபத்து நான்கு கலைகளில் ஒன்றாக கருதப்படும் நாட்டியக்கலை, தெய்வீகக் கலையாக போற்றப்படுகின்றது. தமிழர் நாட்டிய மரபு தொல்காப்பியர் காலத்தில் அபிநயர் என்னும் கூத்தரால் “அவிநயம்” என்ற பெயரில் எழுதப்பட்டுள்ளது. தமிழர்களின் நாட்டிய கலை பற்றிய விரிவான பார்வையை சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் நீங்காத நினைவாக பதியவைத்துள்ளார். மாதவியின் நடன ஆளுமைகள், மேடையின் தோற்றம், உடையலங்காரம் யாவும் விவரிக்கபட்டிருக்கும். இவ்வாறான மரபு வழி வரலாறு கொண்டிருந்தாலும் அந்நிய படையெடுப்பாளர்களால் மரபு வழி அடையாளங்கள் சிதைக்கப்பட்டது.

பரதம்

ஆரம்ப கால மக்கள் அதிக துயரத்தில் ஆழ்ந்து கிடந்தனர். இந்நிலை மாறி எங்கும் இன்பம் உண்டாகும் வண்ணம், அனைவரும் புரிந்து கொள்ளுமாறு நான்கு வேதங்களில் இருந்து ஒரு பொழுதுபோக்கை உருவாக்குமாறு இந்திரன் பிரம்மாவை வேண்டினார். இதற்கமைய இருக்கு வேதத்தில் இருந்து நாட்டியத்தையும், யசூர் வேதத்திலிருந்து அபிநயத்தையும், சாம வேதத்திலிருந்து இசையையும், அதர்வ வேதத்திலிருந்து ரசத்தினையும் தொகுத்து ஐந்தாம் வேதமாக பரத நாட்டியக்கலையினை படைத்தார்.

பரத நாட்டியத்தில் பாடலின் பொருளைக் கைமுத்திரைகள் காட்டும். கை முத்திரைகள் வழி கண் செல்லும். கண்கள் செல்லும் வழி மனம் செல்லும். மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும். முன்பு இது கோவில்களில் மத வழிபாடுகளின் போது கோவில் நடனக் கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டது. 18ஆம் நூற்றாண்டிலிருந்து  தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களின் நடனப் பாணி பரதநாட்டியம் என்று அறியப்பட்டது.

பரதநாட்டியம் என்பது பாவம், ராகம், தாளம் , முத்திரைகள் மூலம் கலைஞர்களின் உணர்வுகளையும், கதாபாத்திரங்களின் கருத்துக்களையும் பார்வையாளர்களுக்கு உணர்த்தும் உடல் மொழி. நடன நடை என்பது தாள நடன நுட்பம் மற்றும் நடிப்பு ஆகியவற்றின் தொகுப்பாகும். எந்தவொரு கலைவெளிப்பாடும் உணர்ச்சிகளின் உந்துததால் உருவானதே. எவ்வாறாயினும் அது நமது வாழ்வியலையும் அது சார்ந்த உன்னதமான கருத்தியலையும் வெளிப்படுத்த வேண்டும். மரபு வழி ஆடல் கலையும், (பரதமும்) தமிழர் வாழ்வியல் சார்ந்த தொன்மையான கருத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது.