“ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்ததாம்” என்ற பாடலோடு ஒரு விளையாட்டு விளையாடி கிராமத்து வாழ்வியலில் வளர்ந்தவர்கள் நாங்கள். மரத்திற்கும் மனிதனுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளது. ஒரு குழந்தை தாயின் கருவறையிலிருந்து பிறப்பதைப் போல மண்ணிலிருந்து வெளிவருகிறது ஒரு முளை. சின்னஞ்சிறு செடியாக மண்ணை முட்டிவரும் விதை தனக்கான முதல் தன்னம்பிக்கையை மனிதகுலத்திற்கு விதைக்கின்றது. சற்றே வளரத் தொடங்கும் போது, நம் வீட்டுப் பிள்ளைகள் பள்ளி செல்வதை உணர்த்துகிறது.
செடிவளர்ந்து கிளை பரப்பி தன்னைச் சுற்றி நிழலால் நிரப்பி பூக்கத் தொடங்குகிறது. குழந்தை வாலிபப் பருவத்தை அடைந்து மணமாவதற்குத் தயாராவதை இது காட்டுகிறது. மணமாகி குழந்தை பெறுவதை, மரமானது பூத்துக் காய்த்து, கனியாகி தன் சந்ததியைப் படைக்க உள்ளோம் என்பதைக் காட்டுகிறது. தன் செல்வத்தை வறியவர்களுக்கு அள்ளித் தரும் வள்ளல் போல, மரம் தன்னிடம் உள்ள பூக்களை, காய்களை, கனிகளை தன்னை பராமரிப்பவர்களுக்கும், நாடிவருகிறவர்களுக்கும் தந்து பசி தீர்க்கின்றது. தாயக பிரதேசங்களின் இயற்கை மண் வளங்களை பயன்படுத்தி அதனூடாக கிடைக்கும் அறுவடையினூடாகவும் மக்களின் பொருளாதார தரத்தை மேம்படுத்த முடியும் என்ற உயரிய சிந்தனையில் “நிழல்” பணிகள் ஊடாக பயன்தரும், நிழல் தரும் பசுமை மரங்களையும் விவசாய தொழில் முனைவோர் மற்றும் முயற்சியாளர்களை முன்நகர்த்தும் பணிகளை பரததர்சனம் அறக்கட்டளை செய்து வருகின்றது.