“வாழ்க உங்கள் கலைப்பணி” மனிதனுடைய பிரதிபிம்பத்தை அவனை விட உயர்ந்ததாக பதித்து மிக மேலான வாழ்க்கைக்கு அதன் மூலம் இட்டுச்செல்வதே கலைகளின் மகத்தான நோக்கமாகும்.
தொன்று தொட்டு வளர்ந்து விளங்கி வரும் கலைகளுள் சிறந்ததாக விளங்குவது ஆடற்கலையாகும். மன உணர்வுகளை வெளிப்படுத்த கை, கால், உடல் அசைவுகள் பயன் படுத்தப்பட்டன. இவ் அசைவுகள் கலை வடிவத்தோடு வெளிப்படுத்தப்படும்போது நடனம் ஆடுபவர்களுக்கு உள, உடல் மகிழ்வையும், பார்ப்போர் கண்களுக்கும், மனதிற்கும் பேரானந்தையும்
அளிக்கின்றது.
இந்த அற்புதமான கலையை ஆடல் கலைமணி திருமதி காயத்திரி திஷாந்தன் அவர்கள் மிக ஆளுமையுடன் மாணவர்களுக்கு கற்பித்து வருவதை நான் அறிவேன். சிறு வயது முதல் பரதக்கலையில் அதீத ஈடுபாட்டுடன் செயற்படும் திருமதி காயத்திரி திஷாந்தன் அவர்கள் இந்தியாவில் தன் மேற் படிப்பை கற்றிருந்தார். தனக்கான பாணியை. அழகுற பயிற்றுவித்து இன்று அரங்கம் காண மூன்று மாணவிகளை தயாராக்கியுள்ளார். அன்பான, ஆளுமையுள்ள குருவைப் பெற்ற இம் மாணவிகளான செல்விகள் துஷாந்தி லிங்கதாஸ், சகானா, சாருகா குலேந்திரநாதன்
ஆகியோர் தமது ஆற்றுகையை திறமையாக வெளிப்படுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை. இவர்களிற்கு ஊக்கம் கொடுத்து தம் பிள்ளைகளிற்கு ஆற்றவேண்டிய கடமையினை உரிய நேரத்தில் நிறைவேற்றும் அவர் தம் பெற்றோர்களிற்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவர்களது அரங்கப்பிரவேசம் சிறப்புற அமைய தில்லைக்கூத்தன் பாதம் பணிந்து, எனது குருமாரையும் மனதில் வணங்கி குரு திருமதி காயத்திரி திஷாந்தன் அவர்களிற்கும், அவர் தம் மாணவிகளுக்கும் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் கூறி அமைகிறேன்.
நன்றி.
“வாழ்க கலை வளர்க பரதம்”
திருமதி. பவானி சிறிதரன். M. A.
முதுகலைமானி (பரதநாட்டியம்) நட்டுவாங்க கலைமணி
(நட்டுவாங்கம்)
நடன கலாவித்தகர்
(கதகளி)
18.6.20023.
Basel.